மொழி பெயர்ப்புக் குழுவில் ஆர்வத்துடன் இணைந்திருக்கும் நண்பர்களுக்கு வணக்கம்.
கீழ்க்காணும் குறிப்புகள் சிலருக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், தெரியாத ஏனையோருக்கு இக்குறிப்புகள் உதவியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் தொடருகிறேன்.
உதவிக்கருவிகள்:
மொழிபெயர்ப்பின் போது சில நேரங்களில் மிகச் சாதாரண வார்த்தைகளுக்கே திணறவேண்டிய சூழல் ஏற்படலாம். இதிலுள்ள கடினம் மொழிபெயர்ப்பில் இருக்கும் ஆர்வத்தையே கூட குறைக்கக்கூடியது. தமிழில் நல்ல அகராதிகள் குறைவு என்பதும் அதை அணுகுவதில் உள்ள சிக்கலும் இதன் கடினத்தை அதிகப்படுத்தியே வைத்துள்ளன. இச்சூழலில் தமிழ் விக்சனரி மிகச் சிறந்த உதவியாக அமையலாம். இங்கு ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ, இரண்டில் ஏதாவதொரு மொழியை பயன்படுத்தித் தேட முடியும். இதை நீங்கள் பயன்படுத்துவது எளிதாக இருந்தாலும், ஒவ்வொரு வார்த்தைக்கும் தமிழ் விக்சனரி சென்று தேடுவதையும் சிரமமான ஒன்றாக உணரலாம். அப்படியானால் உங்களுக்கு பயர்பாக்ஸின் விக்கிலுக் நீட்சி நல்லதொரு தீர்வினைத் தருகிறது. இதனை நிறுவிய பின் உங்களுக்கு வசதியான முறையில் அமைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக பயர்பாக்ஸில் ஏதாவது ஒரு வார்த்தையினை சுட்டினால், அவ்வார்த்தைக்குப் பக்கத்திலேயே அதற்கான பொருளினைக் காண்பிக்குமாறு அமைத்துக் கொள்ள முடிகிறது. எனவே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்புகள்:
இவை பெரும்பாலும் மொழிபெயர்ப்பினைத் தொடங்கும் போது எனக்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கான தீர்வு மட்டுமே.
1. தமிழ் மொழிபெயர்ப்புப் பிரிவில் சுமாராக 30,000 சரங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டியவையாக பட்டியலிடப்பட்டிருக்கின்றது. ஆனால் கூர்ந்து நோக்கினால் இவை துருபாலில் இருக்கும் அனைத்து மட்டுகளையும் உள்ளடக்கிய ஒன்று என்று அறியலாம். இதில் அடிப்படை துருபால் கட்டிற்குத் தேவையானது சுமாராக 3500 சரங்கள் மட்டுமே. இதில் ஏற்கனவே 1500 சரங்கள் வரை மொழிமாற்றப்பட்டுவிட்டன. எனவே மீதமிருப்பது இன்னமும் 2000 சரங்கள் மட்டுமே. இச்சரங்கள் முடிந்தபின் அதிகம் பயன்படும் மட்டுகளுக்குச் செல்லலாம்.
2. துருபால் கட்டிற்குத் தேவையான சரங்களை எவ்வாறு கண்டுகொள்வது? மொழிபெயர்ப்புப் பக்கத்தில் உள்ள வடிகட்டிகளில் Project எனும் களத்தில் Drupal, Statusல் Untranslated, Has no suggestion மற்றும் limit 30 என உள்ளிடுவதன் மூலம் மொழிபெயர்க்கப்படாத சரங்களைக் கண்டு கொள்ளலாம்.
3. தேர்வு செய்த பக்கத்தில் நீளமான வாக்கியங்கள் இருந்து அவற்றை மொழிபெயர்ப்பதில் தடங்கல் ஏற்பட்டால் அவற்றை விடுத்து அடுத்துள்ள பக்கங்களில் உள்ள எளிமையான வாக்கியங்கள்/வாசகங்களுக்குச் செல்லுங்கள். பழகியபின் நீளமான வாக்கியங்களை எளிமையாகக் கையாள முடியும்.
4. சில நேரங்களில் ஏற்கனவே மாற்றப்பட்ட சரங்களையும் சரி செய்யலாம். மொழிபெயர்ப்பவர் சரியான பதத்தினையே பயன்படுத்தியிருப்பார் என்பதில் எந்த உறுதியும் இல்லை. பயன்படுத்தப்பட்ட பதத்தினை விட நல்லதொரு பதம் உங்களிடம் இருக்குமானால் நிச்சயமாக அதனை உள்ளிடுங்கள்.
மற்ற நண்பர்களும் உங்களுக்குத் தெரிந்த எளிமையான வழிகளையோ அல்லது குறிப்புகளையோ எழுதுங்கள். குறிப்பிட்டவற்றுள் ஏதேனும் உதவி தேவையானாலும் எழுதுங்கள்.

Comments
நன்றி நண்பரே, நானும் விக்கி
நன்றி நண்பரே,
நானும் விக்கி நீட்சி நிறுவிவிட்டேன்.
பொதுவான சில கேள்விகளும் கருத்துகளும்
நண்பர்களே வணக்கம். இங்கு பணியாற்றியவர்களின் ஆக்கங்களைக் கண்டு மகிழ்கின்றேன். சில கருத்துகள் சொல்வதை பொருட்படுத்தமாட்டீர்கள் என்னும் நோக்கில் கூறுகிறேன்...மொழி பெயர்ப்பிலும், ஒலிபெயர்ப்பிலும் பல பொதுவான கொள்கைகள் இருப்பது நல்லது எனத் தோன்றுகின்றது. சில விதிமுறைகளைப் பின்பற்றுவதும் நல்லது. சீர்மை (எல்லா இடத்திலும் ஒரே முறையில் இருப்பது) பேணுவதும் நல்லது. எடுத்துக்காட்டாக சில இடங்களில் துருபால் என்றும் சில இடங்களில் ட்ரூபால் என்றும் உள்ளது. அதே போல ப்ளிக்கர்-பிளிக்கர். தமிழில் வேற்றுமொழிச் சொல்லாக இருப்பினும், மெய்யெழுத்துகளில் தொடங்கல் ஆகாது என்னும் ஒரு விதியை நாம் பின் பற்றலாம். இரண்டாவது, வல்லின ஒலிப்பு வேண்டும் எனில் அவ்வெழுத்தின் முன்னே புள்ளிவைத்த வல்லின எழுத்து கட்டாயம் வருதல் வேண்டும். எனவே துருபால் என்றால் இது thurubaal என்றும் ட்ரூபால் என்றால் இது trubaal என்றுமே ஒலிக்கும். எனவே துருப்பால் என்றோ துருப்பல் என்றோ drupal என்பதை ஒலிபெயர்ப்பது நல்லது. துருபால் என்றும் இருக்கலாம் ஆனால் அதன் ஒலிப்பை thurubaal என்றே சொல்லிப் பழக்க வேண்டும்.
துரூபால் என்பதற்குப்பதில்
துரூபால் என்பதற்குப்பதில் டுரூபால் என்றால் என்ன? சரியாக வருமா?
துரூபால் என்பதற்குப்பதில்
drupal என்பதில் உள்ள மெல்லொலி டகரம் தமிழில் துரூப்பல் என்று வந்தால் சற்று
எளிதாகவும் நன்றாகவும் இருக்கும். டுரூப்பல் என்றும் சொல்லலாம். கடைசிப் பகுதியாகிய -pal
என்பதை வல்லின பகர ஒலிப்போடு ஒலிக்க வேண்டும் எனில் துரூப்பல்/டுரூப்பல் என ப் சேர்த்து எழுத
வேண்டும் ஆனால் டுரூபால் என்றால் turoobaal என்று ஒலிப்போம் (இப்படி ஒலிக்கக்கூடாது
என்று சொல்லவில்லை.. தமிழில் இயல்பின் படி இப்படி ஒலிப்பு என்கிறேன்). துரூப்பால், துரூப்பல்,
துருப்பல், துருப்பால் என்பன எளிய நல்ல வழக்குகளாகப் படுகின்றன. முதல் எழுத்தை டு என்றும்
இட்டு எழுதலாம் ஆனால் தவிர்க்க முடிந்தால் நல்லது.
தமிழ் மொழிபெயர்ப்பு கருவிகள்
மிகவும் பயனுள்ள தகவல், நன்றி.
Very useful information. Thanks!
Sharon
Pioneer, Tamil Translation Services in Singapore
கூடுதல் செய்தி
தமிழில் துரூப்பால்
https://www.drupal.org/ta/8